நடிகர் விஜய் , லோகேஷ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்திற்கு பிறகு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார். சித்தார்த்தா நுனி படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க அவருடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. மேலும் படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அடுத்ததாக நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதில் விஜய் உடன் இணைந்து மோகன்லால், சமந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க போவதாக சமீபகாலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அரசியல்வாதியாகவும் உருவெடுத்துள்ளார் நடிகர் விஜய். இந்நிலையில் விஜய், நடிகை ரம்பாவின் குடும்பத்தை சந்தித்துள்ளார். அப்போது விஜயும் ரம்பா குடும்பத்தினரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
ஒரு காலத்தில் நடிகை ரம்பா ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த சமயத்தில் விஜயுடன் இணைந்து மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.