நடிகர் கார்த்தி ஜப்பான் படத்திற்கு பிறகு மெய்யழகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வா வாத்தியார் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார் கார்த்தி. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கார்த்தி நடிப்பில் உருவாகும் சர்தார் 2 படத்தின் பூஜை நடைபெற்றது. பின்னர் அதைத்தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்படும் போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் சண்டை பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். படக்குழுவினர் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஏழுமலையை பரிசோதித்த மருத்துவர்கள் மேலே இருந்து கீழே விழுந்ததில் அவரது மார்பு பகுதியில் அடிபட்டதன் விளைவாக நுரையீரலில் ரத்த கசிவு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டார் என்று கூறியுள்ளனர். இந்த துயர சம்பவம் பட குழுவினரை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எனவே நடிகர் கார்த்தியும் மற்ற பட குழுவினர்களும் ஏழுமலையின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியும் ஏழுமலையின் குடும்பத்தினருக்கு தங்களின் ஆறுதல்களையும் தெரிவித்துள்ளனர்.