கோவை குனியமுத்தூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததோடு புகைப்படம் எடுத்து மிரட்டி கல்லூரி மாணவரை குனியமுத்தூர் போலீஸார் கைது செய்தனர்.
கோவை குனியமுத்தூர் அடுத்த கோவைப்புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வரும் 21 வயது மாணவி ஒருவர் குனியமுத்தூர் போலீஸில் புகார் மனு அளித்தார். அதில் தன்னுடன் படிக்கும் சக மாணவர் ஸ்ரீதர்சன் (21) என்பவர் காதலிப்பதாக கூறி பேசி பழகி வந்தததாகவும், அப்போது அவருடன் எடுத்த புகைப்படத்தை காட்டி மிரட்டி தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வருவதாக தெரிவித்தார்.
அதே கல்லூரியில் ஆங்கிலத்துறை இளங்கலை 3 ஆண்டு படித்து வரும் 19 வயது மாணவி ஒருவரும் ஸ்ரீதர்சன் மீது இதே புகாரை குனியமுத்தூர் போலீஸில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் போலீஸார் ஸ்ரீதர்சனை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர் கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் வாத்தியார் விளை பகுதியை சேர்ந்த ஸ்ரீதர்சன் (22) என்பதும், இவர் கோவை பி.கே.புதூர் பகுதியில் அறையில் தங்கி அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை ஆங்கிலம் 2 ஆம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது.
மேலும் ஸ்ரீதர்சன் தன்னுடன் படிக்கும் மாணவிகள், மட்டுமின்றி ஜூனியர் மாணவிகள் என 6 மாணவிகளிடம் காதலிப்பதாக கூறி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை இணையத்தில் வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டி பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீதர்சன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஸ்ரீதர்சன் பல்வேறு மாணவிகளிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்தது, சக மாணவிகளுக்கு தெரியவந்ததால் அவர்கள் ஸ்ரீதர்சனிடம் பேசுவதை தவிர்த்து வந்தனர். இதனால் விடியோவை காட்டி மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.