நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் அயலான் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியிருந்தார். சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், ஆர் ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் 2 திரைப்படத்தில் நடிக்கப் போவதாக செய்திகளும் வெளியாகி வந்தது. இதற்கிடையில் சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் இந்த படம் அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. மேலும் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் SK23, சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் SK24 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க கடந்த ஜூன் மாதம் சிவகார்த்திகேயனுக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் கூட அந்த குழந்தைக்கு பவன் என்று பெயர் வைத்துள்ளதாக சிவகார்த்திகேயன் அறிவித்திருந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அயலான் பட இயக்குனர் ஆர் ரவிக்குமாரை சந்தித்துள்ளார். இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயனின் கையில் அவரது மூன்றாவது மகன் பவனும், ஆர் ரவிக்குமாரின் அருகில் அவரது மகளும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.