இயக்குனர் சுதா கொங்கரா, மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு சூர்யா நடிப்பில் இவர் இயக்கியிருந்த சூரரைப் போற்று திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று பல விருதுகளையும் அள்ளியது. அடுத்ததாக இவர் மீண்டும் சூர்யா நடிப்பில் புறநானூறு எனும் திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலக அவருக்கு பதிலாக சிவகார்த்திகேயன் களமிறங்கி இருக்கிறார். விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் சுதா கொங்கரா, தனியார் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நிலையில் அப்போது அவர் சாவர்க்கர் குறித்து பேசி இருந்தார். அது பெரிதும் பேசு பொருளாகி சுதா கொங்கரா மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனவே இது தொடர்பாக சுதா கொங்கரா தன்னுடைய தரப்பு விளக்கத்தை தற்போது தெரிவித்துள்ளார்.
என் தவறுக்கு வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில்…
— Sudha Kongara (@Sudha_Kongara) July 27, 2024
அதன்படி தனது எக்ஸ் தள பக்கத்தில், “என் தவறுக்கு நான் வருந்துகிறேன். எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் உள்ள தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.