வயநாட்டில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை விரைவாக மீட்டு வழங்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கேரள மாநிலம் வயநாடு கல்பட்டா பகுதியில் மேப்படி, குத்துமலை, முண்டக்கை, சூரல் மலை ஆகிய பகுதிகளில் அதிலாலை 2 மணியளவில் பெரிய அளவிலான மண் சரிவு ஏற்பட்டது. இதில் 500 குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், 1000த்திற்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பயங்கர நிலச்சரிவில் இதுவரை 54 பேர் உயிரிழந்த நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 250 குடும்பங்களை ராணுவத்தின் உதவியுடன் போராடி மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது, மீட்பு பணிகள் குறித்து கேரள முதல்வரிடம் கேட்டறிந்தேன், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஒன்றிய அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை கண்டறிந்து, அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு இணைப்புகளை விரைவாக மீட்டு வழங்க வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான மறு குடியமர்வு திட்டங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேரளா நிலச்சரிவு தொடர்பாக வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.