ராம்சரண், சங்கர் கூட்டணியில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது
நடிகர் ராம்சரண் ஆர்ஆர்ஆர் படத்திற்குப் பின்னர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். திருநாவுக்கரசு இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, சுனில், ஸ்ரீகாந்த், சமுத்திரகனி, அஞ்சலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவுக்கு வந்தது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தன. அடுத்ததாக இந்த படமானது 2024 கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் பட குழுவினர் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது நடிகை கியாரா அத்வானி இன்று (ஜூலை 31) தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.