பங்கு சந்தையில் மூதலீடு செய்தால்,அதிக லாபம் தருவதாக கூறி ரூ.57 லட்சம் மோசடி செய்த வழக்கில் முகவராக செயல்பட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை அருகே கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்தர் பரீக் (53). இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் இவர் இணையதளம் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், பல மடங்கு லாபம் கிடைக்கும் என விளம்பரத்தை பார்த்துள்ளார். இதையடுத்து அதில் குறிப்பிட்ட வங்கி கணக்குகளில் பல தவணைகளாக கொஞ்சம் கொஞ்சமாக ரூ.57.44 லட்சம் வரை பணத்தை முதலீடு செய்துள்ளார்.
பின்னர் அவர் செலுத்திய பணத்திற்கு கணக்குகளில் காட்டிய லாபத் தொகையை எடுக்க முடியாமல் போனதை உணர்ந்து ஏமாற்றம் அடைந்துள்ளார். இது குறித்து ரவீந்தர் பரீக் ஆவடி காவல் ஆணையரகத்தில் அண்மையில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீஸாருக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
காவல் ஆய்வாளர்கள் மகாலட்சுமி, பிரவீன்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் மோசடி செயலில் ஈடுபட்ட நபரின் வங்கி கணக்குகளை கொடுத்து மோசடி கும்பலுக்கு முகவராக செயல்பட்ட சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பரிதா (34), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் (48) ஆகிய இருவரையும் போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இந்தியா முழுவதும் சைபர் கிரைம் மோசடி; கோடி கணக்கில் கொள்ளை- இளைஞர்கள் 3 பேர் கைது
போலீஸார் இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து விசாரணையில், இவர்கள் இணைய வழி குற்ற செயல் மூலமாக பண மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்து அக்கும்பலுக்கு முகவராக செயல்பட்டதும், இச்செயல் மூலம் நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்த பல நபர்களை ஏமாற்ற உடந்தையாக இருந்ததும், அதன் மூலமாக பல கோடி ரூபாயை மோசடிக் காரர்கள் சுருட்டியுள்ளதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீஸார் தலைமறைவாக இருக்கும் முக்கிய குற்றவாளிகளை இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் தேடி வருகின்றனர்.