இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடல் ரமேஸ்வரத்துக்கு கொண்டுவரப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 31ஆம் தேதி மீன்பிடி அனுமதிச்சீட்டை பெற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை கப்பல், ராமேஸ்வரம் மீனவரின் படகு மீது மோதியதில், படகு கடலில் மூழ்கி சேதமடைந்தது.
இதில் படகில் இருந்த 4 மீனவர்கள் கடலில் மூழ்கி தத்தளித்த நிலையில், இலங்கை கடற்படை அவர்களில் இருவரை உயிருடன் மீட்ட நிலையில், மீனவர் மலைச்சாமியை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து மீனவர் மலைச்சாமியின் உடல் இலங்கை புங்குடு தீவு அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு, கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு சர்வதேச எல்லையில் இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் இந்திய கடலோர காவல் படையினர் மீனவர் உடலை ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு எடுத்துவந்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் உயிருடன் மீட்கப்பட்ட மூக்கையா, முத்து முனியாண்டி ஆகியோர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யாமல் தாயகம் திரும்பியுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீனவர் மூக்கையா, தாங்கள் சர்வதேச எல்லைப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென தங்கள் படகு மீது மோதியதாகவும், இதில் படகு முழுமையாக கடலில் மூழ்கி சேதம் அடைந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் கடலில் தத்தளித்த தன்னையும் , முத்து முனியாண்டியையும் இலங்கை கடற்படை உயிருடன் மீட்டதாகவும், சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் மாயமான ராமச்சந்திரன் என்ற மீனவர் கிடைக்கவில்லை என்றும் மீனவர் மூக்கையா தெரிவித்தார்.