கோவை மயிலேரிபாளையம் அருகே காரில் அழைத்து வந்த வழக்கறிஞரை 4 பேர் கொண்ட கும்பல் சராமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
கோவை மாவட்டம் ரத்தினபுரி விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (48). இவர் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி நித்திய வள்ளி மருத்துவர் இவர் தனியாக கிளிக் நடத்தி வருகிறார். இந்நிலையில் உதயகுமாரை அவரது காரில் 4 பேர் அழைத்துச் சென்றதாக தெரிகிறது.
பின்னர் அவரை கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மயிலேரிபாளையம் வரதோப்பு என்ற பகுதியில் உள்ள பிரிட்டோ என்பவருக்கு சொந்தமான கோழி பன்னை அருகே காரை நிறுத்தி 4 பேரும் வழக்கறிஞர் உதயகுமாரை தலை, தாடை, கழுத்து, கைகளில் சராமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு கோழிப்பன்னையில் இருந்து ஆட்கள் வருவதை கண்ட மர்ம நபர்கள் உதயகுமாரின் காரிலேயே அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து தகவலறிந்து வந்த செட்டிபாளையம் போலீஸார் உதயகுமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்த தடயவியல் அதிகாரிகள் அப்பகுதியில் கிடைத்த தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்ப நாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
சம்பவ தொடர்பாக செட்டிபாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து 6 தனிப்படை அமைத்து தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதனிடையே வழக்கறிஞர் உதயகுமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கோவை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.