தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க இந்த மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. அதற்குள் அமைச்சரவை மாற்றம் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இம்மாதம் 27 ஆம் தேதி அமெரிக்கா சென்று 15 நாட்கள் அங்கே தங்கியிருந்து முதலீட்டாளர்களை சந்திப்பதற்கு முறைப்படி அனுமதி பெறப்பட்டுள்ளது. அதற்கான பயணத்திட்டத்தை ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் கூகுள் நிறுவன தலைமை நிற்வாக அதிகாரி (CEO) சுந்தர் பிச்சையை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மைக்ரோசாப்ட் நிறுவன உரிமையாளர் பில்கேட்ஸ் மற்றும் அந்த நிறுவன அதிகாரிகளையும் முதலமைச்சர் சந்திக்கிறார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க அமெரிக்காவில் மூன்று அல்லது நான்கு பெரிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடுவதற்கு ஏற்ற வகையில பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அமெரிக்காவில் உள்ள சில முக்கிய தொழில் அதிபர்களை முதலமைச்சர் நேரில் சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பதற்கும் அமெரிக்கா வாழ் தமிழர்களை சந்திப்பதுடன் அவர் களையும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குமாறு அழைப்பு விடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சரின் அமெரிக்கா பயணத்திற்கு முன்பு தமிழக அமைச்சரவையில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.