துல்கர் சல்மானின் சீதாராமம் திரைப்படம் இன்றுடன் (ஆகஸ்ட் 5) இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான் தமிழில் ஓகே கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருந்தாலும் இவரது நடிப்பில் வெளியான சீதாராமம் திரைப்படம் தான் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று தந்தது. அதேசமயம் இந்திய அளவிலும் இவரை பிரபலமாக்கியது. இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, சுமந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் துல்கர் சல்மான் ராணுவ வீரனாக நடித்திருந்தார். படத்தில் தன்னை மகாராணி என்பதை வெளிப்படுத்தாமல் ஒரு ராணுவ வீரனுக்காக முழு அர்ப்பணிப்போடு உண்மையான காதலோடு வாழும் ஒரு பெண்ணின் ஆழமான கதையை அருமையாக கூறியிருந்த படம் தான் சீதாராமம். படத்தில் முகம் சுழிக்கும் எந்த ஒரு காட்சியும் இல்லாமல் ராமனாக நடித்திருந்த துல்கர் சல்மான், சீதா மகாலட்சுமியாக நடித்திருந்த மிர்ணாள் தாகூர் ஆகிய இருவருக்கமான அழகான காதலை கண் முன்னே காட்டியிருந்தனர். அதிலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை கண்டு கண்கலங்காதவர்கள் இருக்கவே மாட்டார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இன்று வரையிலும் பேசப்படுகிறது. இந்த நிலையில் இந்த படமானது இன்றுடன் (2024 ஆகஸ்ட் 5) இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.