அல்டிமேட் ஸ்டார், தல என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் அஜித் மூன்று வேடங்களில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். விரைவில் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அவரைத் தொடர்ந்து பிரபல நடிகரும் ஒளிப்பதிவாளரான நட்டி நடராஜ், குட் பேட் அக்லி படத்தில் இணைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
நட்டி நடராஜ் கடந்த ஜூன் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பதும், அடுத்ததாக இவர் அக்டோபரில் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.