Homeசெய்திகள்கட்டுரைசகலகலா ஜெர்னலிஸ்ட் கருணாநிதி

சகலகலா ஜெர்னலிஸ்ட் கருணாநிதி

-

- Advertisement -

ப.திருமாவேலன்

அவர் அதிக ஆண்டுகள் வகித்த பதவி, ‘பத்திரிகையாளன்’ என்ற பதவி தான். ‘பதவியைப் பொறுப்பு’ என்றவர் அவர். பத்திரிகையாளன் என்பது அவருக்குப் பொறுப்பு கூட அல்ல, பிறப்பு!

சகலகலா ஜெர்னலிஸ்ட் - கருணாநிதிஎழுதத் தொடங்கிய காலம் முதல் இறப்பு வரை எழுதிக் கொண்டே இருந்த பத்திரிகையாளன். செயல்பட்டுக்கொண்டே இருந்த பத்திரிகையாளன். பத்திரிகை அதிபர் பத்திரிகை ஆசிரியர் வெளியீட்டாளர் பத்திரிகை நிருபர் தலையங்க ஆசிரியர் பிழை திருத்துநர் கார்டூனிஸ்ட் அச்சக உரிமையாளர் என எல்லா வகைப்பட்ட பத்திரிகைப் பணிகளையும் பார்த்த சகலகலா ஜெர்னலிஸ்ட் அவர்!

‘எப்படி உங்களால் இவ்வளவு பொறுப்புகளுக்கும் மத்தியில் எழுத முடிகிறது?’ என்று நான் கேட்டேன்.’எழுதலேன்னா செத்துடுவேன்யா.

பேனாவைக் கையில இருந்து பறிச்சிட்டா செத்துருவேன்யா’ என்றார். கேள்வி கேட்டதும் யோசிக்காமல் சொன்ன பதில் இது. மூச்சைப் போலவே இருந்தே ஆக வேண்டியதைப் போல இருந்து அவரது இதழியல் பணி!

பேரறிஞர் அண்ணாதான் சொன்னார்: “தம்பி கருணாநிதிக்கு இளமைக் காலம் முதலே நாட்டுக்குச் சொல்லியாக வேண்டும் என்ற கருத்து உருவாகி விட்டது” என்றார். அந்தக் கருத்துதான் அதைச் சொல்லும் வாகனமாகப் பத்திரிகையை உருவாக்க வைத்தது.

‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிக்கையைத் தொடங்கினார். அதுவே ‘முரசொலி’யாக வளர்ந்தது. பின்னர் அச்சு பத்திரிகையாக மாற்றினார். சென்னைக்கு இடம் மாறியதும் இங்கே வந்து பத்திரிக்கை அலுவலகத்தைத் தொடங்கினாா்.

 

சகலகலா ஜெர்னலிஸ்ட் கருணாநிதி

திரை உலகத்தில் வளர்ந்தாலும் பத்திரிகையை விடவில்லை. திரையுலகத்தின் மூலமாகக் கிடைத்த பணத்தையும் பத்திரிகைத் தொழிலில் போட்டார். அரசியலில் வளர்ந்த பிறகும் பத்திரிகை அலுவலகத்தை மறக்கவில்லை. ஐந்து முறை இந்த நாட்டை ஆளும் முதலமைச்சராக ஆனார். ‘முரசொலி’யை விட்டார் இல்லை. எழுத்தை மறந்தார் இல்லை. 70 கடந்தது, 80 கடந்தது, 90 கடந்தது, 95 தொட்டது. ஆனாலும் பத்திரிகை ஆர்வத்தை விட்டார் இல்லை. ‘முரசொலி’ இவரை விடவில்லை.

”அச்சுத் தொழிலை நச்சுத் தொழில்’ என்பார்கள். இவரைப் பொறுத்தவரை அச்சுத் தொழில் மூச்சுத் தொழில்!

கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கிய காலத்தில் தன்னுடைய உணர்வுகள் எப்படி இருந்தன என்பதை அவரே ஒரு முறை எழுதினார். “பள்ளி மாணவன் நான்! நானே எழுதி நானே படித்து மகிழும் நிலைமாறி, பத்து நூறு பேர் படித்துப் பாராட்டும் நிலைக்கு உயர்ந்தேன். ஒரு பத்திரிக்கையை எடுத்துக் கொண்டு திருவாரூர் முழுவதும் ஒருவார காலம் சுற்றி வந்தேன். அந்த மகிழ்ச்சியை வர்ணிக்கவே முடியவில்லை. நாலுபேர் உட்கார்ந்து பேசும் இடத்திற்குப் போவேன். பேசிக் கொண்டே கையிலிருக்கும் பத்திரிகையைக் கீழே வைப்பேன். யாராவது எடுத்து நம் கட்டுரையைப் படிக்க மாட்டார்களா என்று ஆவலோடு அமர்ந்திருப்பேன். அவர்கள் அதைப் படித்து என்னைப் பாராட்டிய பிறகே அதை விட்டு அகல்வேன்” என்றார்.

‘எனது எழுத்தை யாராவது எடுத்துப் படிக்க மாட்டார்களா?’ என்று ஏங்கினார் அவர். இன்று ஏன் எழுதவில்லை?’ என்று இன்று அனைவரையும் ஏங்க வைப்பவரும் அவரே!

நாடகம், திரைப்படம், அரசியல், இலக்கியம் என நாலா பக்கமும் சுற்றினாலும் மையமாக இருந்து அவரால் இயக்கப்பட்டது பத்திரிகைகள் தான். ‘முரசொலி’யில் தொடங்கினார். பெரியார் அழைத்துச் சென்று ‘குடிஅரசு’வில் உட்கார வைத்தார். பின்னர் மீண்டும் ‘முரசொலி’யில் தொடர்ந்தார். கூடவே, மறவன் மடல்’ நடத்தினார். ‘முத்தாரம்’ தொடங்கினார். ஒரே மனிதருக்கு ஏன் இத்தனை இதழ்கள்? அவர் எழுத்துக்கும், கருத்துக்கும் ஓர் இதழ் போதவில்லை. நான்கைந்து இருந்தால்தான் அனைத்திலும் சொல்லி முடிக்க முடியும் என்ற தாகம்! என்ற வேகம்! எழுத்தாணி பதில்கள், பொன்முடிக்குக் கடிதம், சுழல் விளக்கு, உங்கள் பார்வை, நில் நண்பா எங்கே போகிறாய்?, கலைக்கோட்டம், மூனா கானா பேனா முள் என்று புதுப்புது தலைப்புகளைத் தந்து எழுதினார். எழுத வைத்தார். குண்டு வீச்சு’ என்பது ஒரு பகுதியின் தலைப்பு. அதை எழுதியவர் பெயர், ‘விமானி’. இதுவும் அவர்தான். புதுப்புது தலைப்புகளைத் தந்தார். புதுமைகளைச் செய்தார்.

சகலகலா ஜெர்னலிஸ்ட் கருணாநிதி

‘எழுதவில்லை’ என்று எழுதினார். ‘கவிதையல்ல’ என்று எழுதியதுதான் இன்று வரை கவிதையாக இருக்கிறது.

நாளிதழ் என்பதால் செய்திகள் மட்டும் தான் இருக்க வேண்டுமா? சிறுகதை போடக் கூடாதா? கவிதை வெளியிடக் கூடாது என்பதென்ன சட்டமா? இதையும் உடைத்தார். சிறு கதைகள் வெளியானது. கவிதைகளும் பொங்கின. குறளோவியம்’ எழுதத் தொடங்கியதும் ‘முரசொலி’யில் தான்!

பாதை சொல்வதற்காக மட்டுமல்ல பதிலடி தருவதற்காகவும் பத்திரிகையைப் பயன்படுத்திக் கொண்டார். கல்கி இதழில் இராஜாஜி ‘சக்ரவர்த்தி திருமகள்’ எழுதினார். இவர் முரசொலியில், ‘சக்ரவர்த்தியின் திருமகள்’ எழுதினார். என்ன பெயரில் என்றால், ‘மூக்காஜி’ என்ற பெயரில்! ‘திருவாளர் தேசீயம் பிள்ளை’ அவரது புனைவுகளில் தலைசிறந்தது.

நாளேட்டை, வாசகன் வீட்டுக்கு அனுப்பும் அன்புக் கடிதமாக மாற்றியதில் தான் அவரின் வெற்றி அமைந்திருந்தது. ‘தலைவர் கடிதம் வந்திருக்கிறது’ என்று லட்சக்கணக்கான தொண்டர்கள் மனம் மகிழ்ந்து போகும் அளவுக்கு கடிதங்கள் மூலமாகத் தொண்டனைக் காதலித்தார். கடிதங்களைப் படித்ததன் மூலமாக தொண்டர்கள் காதலித்தார்கள். இதுவும் ஒருவிதமான ‘ஒருதலைக் காதல்’தான். கலைஞர் எனும் ஒரு தலையை கோடிக்கணக்கான தலைகள் காதலித்தன.

இவை அனைத்தும் காலாவதியாகாத கடிதங்கள். காலத்தால் அழிக்க முடியாத கடிதங்கள். 4 ஆயிரத்து 41 கடிதங்களும் 54 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அரசியலும் இலக்கியமும் – தமிழ்நாடும்- இந்தியாவும் உலகமும் கழகமும் சமூகமும் அதற்குள் இருக்கிறது. அனைத்துக்கும் மேலாக ‘அன்பார்ந்த’, உயிரினும் மேலான உடன்பிறப்புகள்’ இருக்கிறார்கள். ஒரு மாபெரும் திராவிடப் பேரியக்கத்தை வளர்த்தெடுத்தது இந்தக் கடிதங்கள் தான்.

சகலகலா ஜெர்னலிஸ்ட் கருணாநிதி

பதவிகள் பெற்றவரில்லை நேரில் பார்த்தவரில்லை முகம் அறிந்தார் இல்லை ஆனாலும் அவரோடு வாழ்ந்ததாக லட்சக்கணக்கானவரை நினைக்க வைத்தவை அவரின் கடிதங்கள். ‘பார்த்தாயா உடன்பிறப்பே!’ என்று சொல்லும் போது, முதுகுக்குப் பின்னால் இருந்து சொல் வதைப் போல இருந்தது. ‘நான் சொல்வதைச் செய்வாயா உடன்பிறப்பே!’ என்பதைப் படிக்கும் போது, முகத்துக்கு முன்னால் இருந்து கட்டளையிடுவதைப் போல இருந்தது. முதல் பக்கத்தில் முன்னேற்றக் கழகத்தை வளர்த்த முதல் எழுத்துகள் அல்லவா அவை?!

2001 ஆம் ஆண்டு அவரைப் பேட்டி எடுக்கச் சென்றிருந்தேன். பேட்டி முடிந்தபிறகும் முக்கால் மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். ‘குடிசைதான் ஒரு புறத்தில்… கூரிய வேல்வாள் வரியாக அமைந்திருக்கும்…’ என்ற கவிதை வரியைச் சொல்லத் தொடங்கினார்.

சொல்லிக் கொண்டே இருந்தார்!

“கருத்தறியப் பொய் சொன்ன கயவனெங்கே?

வாளிங்கே! அவன் நாக்கெங்கே?…” என்று சொல்லி முடித்தார்.

1945ஆம் ஆண்டு எழுதிய வரிகளை 2001 ஆம் ஆண்டு பிசிறு இல்லாமல் சொன்னார். அப்படியே மனப்பாடமாக வைத்திருக்கிறீர்களே?’ என்றேன். நாம் எழுதுனது முதல்ல நமக்கு மனப்பாடமாக இருக்கணும். நாமே மறந்துட்டா மற்றவங்க எப்படி ஞாபகம் வெச்சிருப்பாங்க?” என்று திருப்பிக் கேட்டார். இது அவரது ஞாபக சக்தி அல்ல, ஞான சக்தி. அறிவு சக்தி. தமிழ் உரம். தமிழின மறம்.

அந்தக் குரலும், அவரது தமிழும், அதை சொல்லும் திறமும்தான் அவர் எழுத்து எல்லார்க்கு உள்ளேயும் எளிதாகப் போனது. அவரது வசனத்தைப் பற்றி பத்திரிகையாளர் சோ ஒரு முறை சொன்னார்: பாட்டை போலவே அவரது வசனத்துக்கும் இசை லயம் உண்டு’ என்றார். வாசிக்கும் போதே அடுத்தடுத்த வரிகள் ஓடி வந்துவிடும். நடிகை எம்.என்.ராஜம், ‘கலைஞரின் வசனத்தில் முதல் இரண்டு வரியை மனப்பாடம் பண்ணிவிட்டால் அடுத்த வரிகள் எல்லாம் நீரோட்டம் போல கடகடவென்று நிற்காமல் வந்து விழுந்து விடும்” என்று சொன்னார். கவிதை வரிகளில் முதல் வரி நினைவுக்கு வந்தால், அடுத்தடுத்த வரிகள் தானே வந்துவிடும். அத்தகைய சிறப்பு அவரது எழுத்துக்கும் உண்டு.

இன்னொரு சிறப்பும் அவருக்கு இருந்தது.  பலரும் அறியாதது. தனது வசனத்தை எம்.ஜி.ஆர். பேசினால் எப்படிப் பேசுவார், சிவாஜி பேசினால் எப்படிப் பேசுவார், எஸ்.எஸ். ஆர். பேசினால் எப்படிப் பேசுவார் என்று ஒரு முறை என்னிடம் சொன்னார். ‘ஆண்ட்ராய்டு’ போன் இல்லாத காலம் அது. அதையெல்லாம் பதிவு செய்து இருந்தால் இன்று நடிப்புக்கு இலக்கணமாக இருந்திருக்கும். எம்.ஜி.ஆருக்கு சிறுசிறு வசனங்களையும், சிவாஜிக்கு பெரிய பெரிய வசனங்களையும் எழுதுவேன் என்றும் அப்போது சொன்னார். எஸ்.எஸ்.ஆரின் உச்சரிப்பைச் சிறப்பாகச் சொன்னார். யாருக்கு எழுதினாலும் கொள்கை ஒன்றுதான். ‘சான்ஸ்’ தேடிக் கொண்டிருந்த காலத்திலும் கொள்கையைச் சொல்லும் சான்ஸை விடாதவர் அவர்.

கொள்கைப் பூர்வமாக எழுதியவர்களைப் பிடிக்கும். தன்னைப் போல எழுதியவர்களை அழைத்துப் பாராட்டினார். தன்னைத் திட்டி எழுதுபவர்களைக் கூட அழகான தமிழில் எழுதினால் ரசிப்பார். அவருக்கு பத்திரிகைத் துறை நண்பர்கள் அதிகம். மூத்தவர்கள் முதல் இளையவர்கள் வரை அனைவரையும் அறிவார். எழுதியவர் பெயரைப் பார்த்து விட்டுத் தான் கட்டுரையைப் படிப்பார். பாராட்டி எழுதுவதாக இருந்தால் எழுதியவர் பெயரைக் குறிப்பிட்டு விட்டு எழுதுவார். விமர்சிப்பதாக இருந்தால் பத்திரிகையின் பெயரை மட்டும் குறிப்பிட்டு விமர்சிப்பது வழக்கம். பத்திரிகையாளர்களை தனது ‘ஜாதியாக’ நினைப்பார். அவர்கள் மீது பாசமும் அதிகம். அவர்கள் தவறிழைத்தால் அதனால் தான் கோபமும் அதிகம் வரும்.

பல போராட்டங்களுக்கு பிறகு “தமிழ்நாடு” பெயர் வந்தது: இன்றைய மாணவர்களுக்கு சொல்லி கொடுங்கள்

கலைஞரின் வடிகாலும், வாய்க்காலும் எழுத்தும், இதழ்களும்தான் சிந்தனையோட்டமும் இரத்தவோட்டமும் இறுதி வரை சீராக இருக்கக் காரணம். இவை இரண்டும்தான். இளமை முதல் முதுமை வரை நாட்டுக்குச் சொல்வதற்கு திராவிடக் கருத்தியல் அவருக்கு இருந்தது. ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்ற அடையாளம் தான் அவரை இயங்க வைத்துக் கொண்டு இருந்தது. அவர் ரத்தம் கொடுத்து கருப்பு-சிவப்புக் கொடியை உருவாக்கினார். அதனால்தான் அந்த ரத்தத்துடிப்பு இறுதி வரை இருந்தது.

இடைக்காலத்தில் கொடிக்கு ஒரு சிக்கல் வந்தது. அந்த வழக்குக்காகத் தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு இனமானப் பேராசிரியர் அழைக்கப்பட்டார். அவர் டெல்லி புறப்படும் முன் அறிவாலயத்தில் கலைஞரைச் சந்தித்தார். “கொடியையும் சின்னத்தையும் நமக்கு வாங்கி விட்டுத்தான் நீங்கள் வர வேண்டும். இல்லாவிட்டால் என்னை உயிரோடு நீங்கள் பார்க்க முடியாது” என்று கதறியபடி சொன்னார் கலைஞர். ‘அதே எண்ணத்தோடுதான் நானும் டெல்லி செல்கிறேன். ஆனால் அந்த உணர்ச்சி என்பது என்னை விட கலைஞருக்குத்தான் அதிகம்’ என்று சொன்னார் பேராசிரியர். இந்த உணர்ச்சிதான் கலைஞரை இயக்கிக் கொண்டிருந்த நெகிழ்ச்சிமிகு உணர்ச்சியாகும்.

இறுதியாகச் சொன்ன சொல், ‘அண்ணா’ என்பதில்தான் இருக்கிறது கலைஞரின் உடல்! இறுதியாய் வந்து சென்ற இடம் ‘முரசொலி’ அலுவலகம் என்பதில்தான் இருக்கிறது கலைஞரின் உயிர்!

MUST READ