Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழக மீனவர்களை கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழக மீனவர்களை கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

-

- Advertisement -

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்கள் கைது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 35 மீனவர்கள், 4 நாட்டுப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஆழ்ந்த வேதனையும் கவலை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் 2 மீனவர்கள் உயிரிழந்த நிலையில், மீனவர் பிரச்சனை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சரை, தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சந்தித்ததை நினைவுகூர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க நிவாரணமோ தீர்வோ ஏற்படவில்லை என்று வருத்தத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

நமது மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படும் சம்பவங்களால், மீனவக் குடும்பங்கள் மிகுந்த துயரங்களுக்கு ஆளாவதோடு, கடலோர மீனவ சமுதாயத்தினரிடையே அச்ச உணர்வும், அவர்களது வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இதுபோன்ற கைது நடவடிக்கைகள் மீனவ குடும்பங்களின் மன நம்பிக்கையை குலைத்து, பெருத்த நிதி சுமையை ஏற்படுத்தி, அவர்களது பாரம்பரிய மீன்பிடித் தொழிலை கடினமாக்கி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாகவிடுவிப்பதை உறுதிசெய்திடவும், இதுபோன்ற கைது சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க நிரந்தரத் தீர்வை ஏற்படுத்திடவும் வலுவான தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், கடலோர மீனவ சமுதாயத்தினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கைது செய்யப்பட்டஅனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவித்து, தாயகத்திற்குஅழைத்து வருவதை உறுதி செய்திட வேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை கேட்டுக் கொண்டுள்ளார்.

MUST READ