Homeசெய்திகள்க்ரைம்நிதி நிறுவனத்தில் மோசடி - வின் டிவி உரிமையாளர் தேவநாதன் கைது

நிதி நிறுவனத்தில் மோசடி – வின் டிவி உரிமையாளர் தேவநாதன் கைது

-

சென்னை மயிலாப்பூரில் 150 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் வைப்பு நிதி 525 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறப்படுகிறது. காணாமல் போனதாக கூறப்படும் 525 கோடி ரூபாய் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதா?

நிதி நிறுவனத்தில் மோசடி - வின் டிவி உரிமையாளர் தேவநாதன் கைதுசென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் கடந்த 1872ம் ஆண்டு தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிட் என்ற பெயரில் நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிரந்தர வைப்பு தொகை உறுப்பினர்களாக உள்ளனர். இதில் பெரும்பாலும் ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் முதியவர்கள் தங்களது ஓய்வூதிய பணத்தை அதிகளவில் முதலீடு செய்துள்ளனர். இந்த நிதி நிறுவனம் முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11 சதவீதம் வரை வட்டி அளிப்பதாக அறிவிக்கப்பட்டது.

குறிப்பாக ஒரு லட்சத்திலிருந்து 10 லட்சம் வரையிலும் 50 லட்சத்தில் இருந்து 2 கோடி வரையிலும் பல்வேறு விதமான திட்டத்தின் அடிப்படையில் வைப்பு நிதியாக கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. முதலீடு செய்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து வைத்திருப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரபலமான நிதி நிறுவனத்தின் தற்போதைய தலைவர் சிவகங்கை மாவட்டத்தின் பாஜக வேட்பாளரான தேவநாதன் ஆவார்.

நிதி நிறுவனத்தில் மோசடி - வின் டிவி உரிமையாளர் தேவநாதன் கைதுகுறிப்பாக இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து வைப்பு நிதியின் வட்டிப் பணத்தை பெறுவதற்காக முயற்சித்தும் அலைக்கழிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். சாப்ட்வேர் கோளாறு காரணமாக வங்கிக் கணக்கில்  நேரடியாக பணம் போடப்பட்டு வந்த நிலையில் , பணம் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு காசோலைகளாக கொடுப்பதாக தெரிவித்துள்ளனர்.

அந்த காசோலைகளை பயன்படுத்தி பணத்தை எடுக்கும் பொழுது நிதி நிறுவனத்தில் பணம் இல்லை என வங்கிகளில் தெரிவிப்பதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் தங்கள் வைப்பு நிதியை திரும்பப் பெறவும், வட்டி பணத்தை வாங்கவும் வருபவர்களை பல்வேறு காரணங்கள் கூறி திருப்பி அனுப்பப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

ராணுவ வீரரை நிர்வாணப்படுத்தி அடித்துத் துன்புறுத்திய போலீஸ்

நிதி நிறுவனத்தில் போடப்பட்ட பணம் வைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்குகள் முதலில் சிட்டி யூனியன் வங்கியில் இருந்ததாகவும் அதன் பின் கரூர் வைசியா வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர் தற்போது ஆக்சிஸ் வங்கியில் மாற்றப்பட்டதால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கொடுப்பதில் கால தாமதம் ஆவதாக நிதி நிறுவனம் காரணம் காட்டி திருப்பி அனுப்புகின்றனர் என வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறாக தொழில்நுட்பக் கோளாறு, வங்கிக் கணக்குகள் மாற்றம் என பல காரணங்களை கூறி தொடர்ந்து பணத்தை திருப்பி கொடுக்காமல் அலைக்கழிக்கப்படுவது அனைத்து வாடிக்கையாளர்களையும் பதட்டமடைய செய்துள்ளது.  இந்நிலையில் தமிழக பாஜகவில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட பலரும் காத்திருந்த நிலையில், சிவகங்கை பாஜக வேட்பாளராக இந்த நிதி நிறுவனத்தின் தலைவர் அறிவிக்கப்பட்டது வாடிக்கையாளர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நிதி நிறுவனத்தின் 525 கோடி ரூபாய் பணத்தை நாடாளுமன்றத் தேர்தலுக்காக செலவிட்டுள்ளார்களா என்ற அச்சம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம், ஹிஜாவு மற்றும் ஐஎஃப்எஸ் நிறுவனத்தின் மூலமாக அதிக வட்டி தருவதாக கூறி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பொதுமக்களிடம் மோசடி செய்யப்பட்டதாக வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்திலும் பணம் இல்லை என வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் பொருளாதார நிபுணருமான ஆனந்த் சீனிவாசன் மயிலாப்பூர் நிதி நிறுவனம் தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தல்  பாஜக வேட்பாளராக போட்டியிடும் தேவநாதன் தலைவராக இருக்கும்  நிதி நிறுவனத்தில் 525 கோடி ரூபாய் காணவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக போடப்பட்ட பதிவு வாடிக்கையாளர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது குறிப்பாக அந்த நிதி நிறுவனத்தின் தலைவர் வேட்பாளராக விண்ணப்பிக்கும் பொழுது தனது சொத்து மதிப்பு 206 கோடி ரூபாய் என காட்டியுள்ளதையும் மேற்கோள் காட்டியுள்ளார்.

வருமானவரித் துறையும் அமலாக்கத் துறையும் தேர்தல் ஆணையமும் ஒரு பாஜக வேட்பாளர் தலைவராக இருக்கும் நிதி நிறுவனத்தில் மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் விசாரணை நடத்தப்படவில்லை ஏன் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் கணக்கில் வராமல் கொண்டு வரப்படும் பணத்தை தேடி தேடி தேர்தல் ஆணையம் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில், சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் தலைவராக இருக்கும் நிதிநிறுவனத்தில் 525 கோடி ரூபாய் காணவில்லை என்ற குற்றச்சாட்டை தேர்தல் ஆணையமும் விசாரணை அமைப்புகள் விசாரித்தால்தான் பல்வேறு உண்மைகள் வெளியாகும் என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ