தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் ஹெச். வினோத், சதுரங்க வேட்டை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து இவர், தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். துணிவு படத்திற்கு பிறகு ஹெச். வினோத், கமல்ஹாசன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால் படம் அடுத்த கட்டத்திற்கு நகரவே இல்லை. அதேசமயம் நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கி இருக்கும் நிலையில் அவரது கடைசி படத்தை ஹெச். வினோத் தான் இயக்கப் போகிறார் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தி கோட் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் தளபதி 69 படம் தொடர்பான பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பரவி வருகிறது. அதாவது தளபதி 69 படத்தில் நடிகை சமந்தா நடிக்க போவதாகவும் விஜயுடன் இணைந்து மோகன்லால் அல்லது கமல்ஹாசன் நடிக்க போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படம் அரசியல் கதைகளத்தில் உருவாக இருக்கிறது என்றும் தகவல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் ஹெச். வினோத் தனியார் தொலைக்காட்சியின் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தளபதி 69 படம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “விஜயின் அடுத்த படத்தை நான் தான் இயக்கப் போகிறேன். இந்த படம் அரசியல் பேசாது. ஆனால் கமர்சியல் படமாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.