இந்தி மொழியில் வெளியான அந்தாதுன் என்ற க்ரைம் திரில்லர் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தகன். இந்த படத்தை பிரபல நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார். படத்தில் பிரசாந்த், சிம்ரன், கார்த்திக், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த சில வருடங்களாக கிடப்பில் கிடந்த இந்த படம் ஆகஸ்ட் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எனவே அந்தகன் பட குழுவினர், படத்திற்கு கிடைத்த வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். எதற்காக சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய நடிகை சிம்ரன், “திரைத்துறையில் நுழைந்து 29 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறேன். இப்போது 30 ஆவது ஆண்டில் அந்தகன் படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தந்த இயக்குனர் தியாகராஜனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பேசினார்.
பிரியா ஆனந்த் பேசுகையில், “அந்தகன் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். படம் தொடங்கும்போதே பாசிட்டிவாக இருந்தது. அதேபோல வெளியான பின்பும் பாசிட்டிவான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 90ஸ்களின் ஸ்டார் நடிகர்கள் பிரசாந்த், சிம்ரன் இருவரும் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும். இயக்குனர் தியாகராஜன் சார் இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் காதல் படங்கள் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அந்தகன் என்ற சூப்பர் ஹிட் படத்தில் ஒரு அங்கமாக இருப்பது பெருமை அடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இயக்குனர் தியாகராஜன் பேசுகையில், “அந்தகன் படத்தை மக்களிடம் நல்ல முறையில் கொண்டு சேர்ப்பதற்கு அனைத்து ஊடகத்தில் இருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தில் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. படத்தில் பிரசாந்த் ஹீரோவாக இருந்தாலும் மற்ற நடிகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க சிம்ரனைத் தவிர வேறு யாரும் என்னுடைய எண்ணத்தில் வரவில்லை. அவரிடம் பேசியபோது அவரும் ஓகே சொல்லிவிட்டு அவருடைய ஆதரவையும் தந்தார். சமுத்திரக்கனி மிகவும் பிசியான நடிகர். நான் கேட்டேன் என்பதற்காக உடனே சம்மதம் தெரிவித்தார். படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி” என்று பேசியுள்ளார்.
பிரசாந்த் பேசும்போது, “அந்தகன் படத்தை இந்த அளவில் மிகப்பெரிய வெற்றி படமாக மாற்றியதற்கு ரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இந்த படத்தின் வெற்றிக்கு நடிகர் கார்த்திக் போன்ற அனுபவமுள்ள நட்சத்திரங்களும் முக்கிய காரணம். கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, ஊர்வசி ஆகியோருடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தை மறக்க முடியாது. நானும் சிம்ரனும் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன. அந்த வரிசையில் அந்தகன் படமும் இடம்பிடித்துள்ளது. இதற்காக சிம்ரனுக்கு பிரத்தியேகமாக நன்றி சொல்கிறேன். சக நடிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தேசிய விருது வென்றுள்ள மணிரத்னம், ஏ ஆர் ரகுமான் போன்ற அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.