ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் கடந்த ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு ஜெய்பீம் பட இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தனது 170 வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்திற்கு வேட்டையன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ரஜினியுடன் இணைந்து அமிதாப் பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் இந்த படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் இதன் படப்பிடிப்புகளும் திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததை தொடர்ந்து டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வேட்டையன் படத்தில் முக்கிய அறிவிப்பு நாளை (ஆகஸ்ட் 19) காலை 10 மணி அளவில் வெளியாகும் என பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே இந்த அறிவிப்பு வேட்டையன் படத்தில் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.