நடிகர் ரஜினி கடந்தாண்டு வெளியான ஜெயிலர் படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரஜினியின் 170வது படமாக உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை போன்ற பல பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது டப்பிங் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருடன் இணைந்து பகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து இந்த படம் அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று சொல்லப்பட்டது. பின்னர் சமீபத்தில் இப்படம் அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இதன் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரம் அதாவது செப்டம்பர் 20ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -