கிருஷ்ணகிரியில் பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும மாவட்ட ஆட்சியர் கே. எம். சரயு தெரிவித்துள்ளார்.
12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணகிரி மாவட்டம் ஆட்சியர் கே.எம். சரயு,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடந்த அசம்பாவிதம் தொடர்பாக தற்போது வரை 11 பேர் கைது செய்துள்ளதாக தெரிவித்தார். என்.சி.சி பெயரில் வெளியில் இருந்து ஆட்கள் வந்து முகாம் நடத்தி உள்ளதாகவும், விசாரணையில் என்சிசிக்கும் இவர்களுக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்து உள்ளதாகவும் ஆட்சியர் சரயு கூறினார்.
புகார் கிடைக்கப் பெற்ற உடனடியாக 4 தனிப்படை அமைத்து முக்கிய குற்றவாளி உட்பட 11 பேரை கைது செய்துள்ளதாகவும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மூலமாக குழந்தைகளிடம் விசாரணை செய்து அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் உளவியல் ரீதியான உதவிகளை வழங்கி வருவதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கல்வித்துறை மூலமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் அதனை மறைக்க முயற்சி செய்த அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாகவும் ஆட்சியர் கே.எம்.சரயு கூறினார். நேற்று 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று முக்கிய குற்றவாளி உட்பட மேலும் 3 பேரை கைது செய்துள்ளதாக தெரிவித்த ஆட்சியர், வேறு எந்த பள்ளிகளில் எல்லாம் இதுபோன்ற முகாம் நடத்தியுள்ளார்கள் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
பள்ளி மாணவர்களை வைத்து முகாம் நடத்துபோது அதற்கான விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை என்று கூறிய ஆட்சியர், என்சிசி இடம் எந்தவித அனுமதி கடிதமும் பெறாமல் இந்த முகாமை நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். 5 நாள் பயிற்சி முகாமில் கலந்துகொண்ட அனைத்து மாணவிகளிடம் பேசியுள்ளதாகவும்,
அவர்கள் அனைவருக்கும் உரிய ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாகவும் ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்தார்.