பி எஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் கார்த்தி, பி எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் எனும் திரைப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஸ்பை த்ரில்லர் கதைகளத்தில் உருவாகியிருந்த இந்த படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதைத் தொடர்ந்து பிஎஸ் மித்ரன், கார்த்தி கூட்டணியில் சர்தார் 2 எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படமானது போதைப்பொருள் சம்பந்தமான கதை களத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை நடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்து முடிந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 22) ஈவிபி பிலிம் சிட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 5ஆம் தேதி தலக்கோணம் பகுதியில் தொடங்க இருப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.