கேலோ இந்தியா அமைப்பின் சார்பில் பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள் திருப்போரூரில் இன்று காலை நடைபெற்றது. இதில், 6 மாநிலங்களில் இருந்து 120 பெண்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், அந்தமான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கு இடையே கேலோ இந்தியா அமைப்பின் தென் மண்டல பிரிவின் சார்பில் பெண்களுக்கான சைக்கிள் போட்டிகள் சென்னை அருகே திருப்போரூரில் இன்று (ஆகஸ்ட் 31) நடைபெற்றது.
இந்தப் போட்டிகளை இந்திய விளையாட்டு ஆணையத்தின் இணை இயக்குநர் ஸ்வேதா விஸ்வநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த போட்டிகளில் 14 வயது முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கும், மற்றொரு போட்டி 16 வயது முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு ஒரு போட்டியும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த போட்டிகளில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 120 பெண்கள் கலந்து கொண்டனர். அதேபோன்று உள்ளூர் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் கலந்து கொள்ளும் நிலையில் 16 வயதுக்கு உட்பட்ட பிரத்யேகப் போட்டியும் நடத்தியுள்ளனர்.
இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 80 மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டிகள் நாளையும் தொடர்ந்து நடைபெற இருக்கிறாது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன் சங்க தலைவர் சுதாகர், செயலாளர் விக்னேஸ்வரன், பொருளாளர் பழனி ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டிகளை ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா மற்றும் தமிழ்நாடு சைக்கிள் அசோசியேஷன் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். போட்டிகளில் வெற்றிபெறுவோருக்கு ரூ.10 லட்சம் வரை ரொக்கப் பரிசுகள்.