அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 3-வது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடரான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், நட்சத்திர வீரருமான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாபிரின் முதல் 2 செட்களையும் கைப்பற்றி ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு ஆடிய ஜோகோவிச் 3-வது செட்டை கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற பரபரப்பான 4-வது செட்டை பாபிரின் கைப்பற்றி ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார்.
முடிவில் பாபிரின் 6-4, 6-4, 2-6 மற்றும் 6-4 என்ற செ ட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். போட்டியில் தோல்வியடைந்த ஜோகோவிச் தொடரிலிருந்து வெளியேறினார்.