தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், ஆம்னி பேருந்து கட்டணம் உயராது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்வை திரும்ப பெறுமாறு, லாரி உரிமையாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், கனரக வாகன ஓட்டிகள் மத்திய அரசுக்கு கோரிகை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்ந்தாலும், ஆம்னி பேருந்து கட்டணம் உயராது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும், இதில் 5 முதல் 7% வரை சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டு, முன்இருந்த கட்டணத்தை விட கூடுதலாக 5 முதல் 150 ரூபாய் வரை அதிகம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் இந்த பொருளாதார நெருக்கடியை ஆம்னி பேருந்து உரிமையாளர்களே ஏற்றுக்கொள்ளும் வகையில் ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தைவிட உயராது என அறிவித்துள்ளனர். மேலும், மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு காலாவதியான டோல்கேட்களை அப்புறப்படுத்தும் படியும் தற்போது உயர்த்தப்பட்டுள்ள டோல்கேட் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.