பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் பிரிவில் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன், மனிஷா ராமதாஸ் ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரா ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் எஸ்.யு. 5 பிரிவில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் வெள்ளிப்பதக்கமும், மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தினர். அவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், பாராலிம்பிக் மகளிர் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசனுக்கும், வெண்கல பதக்கம் வென்ற மனிஷா ராமதாசுக்கும் வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். மேலும், உங்களது அர்ப்பணிப்பும், தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கானோரை ஊக்குவிப்பதாகவும், உங்களை நினைத்து பெருமை கொள்வதாகவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரகாசித்து கொண்டே இருங்கள் என்றும் வாழ்த்தியுள்ளார்.
இதேபோல், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு உள்ள பதிவில், பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் பேட்மிண்டன் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தங்கை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கமும், தங்கை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கமும் வென்று அசத்தியுள்ளனர். சர்வதேச அரங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்திருக்கும் தங்கைகள் இருவருக்கும் நம் பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்