மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் உயரம் தாண்டுதல் டி63 பிரிவு இறுதிப்போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டியில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்தார். முன்னதாக ரியோ பாராலிம்பிக்கில் தங்கமும், டோக்கியோ பாராலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் அவர் வென்றிருந்தார்.
இந்நிலையில், மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டு உள்ள சமுகவலைதள பதிவில், தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.