ஆவடி மீனாட்சி திரையரங்கில் GOAT திரைப்படம் அரசு விதிகளை மீறி காலை சிறப்பு காட்சி திரையிடப்படும் நிலையில், நாளை சிறப்பு காட்சிக்கும் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெறுகிறது.
விஜய் நடிப்பில் உருவான படம் கோட். ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உண்டான இப்படம் கடந்த 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. இதனையொட்டி தமிழகத்தில் உள்ள திரையரங்குகளுக்கு அன்று மட்டும் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.
இந்த நிலையில், ஆவடி மீனாட்சி திரையரங்கில் அரசு விதியை மீறி நேற்றிலிருந்து காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.இதே போன்று நாளை காலை காட்சிக்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதே போன்று பூந்தமல்லி உள்ள கோகுலம் திரையரங்கில் காலை 7.30 காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது.
சென்னையின் பெரும்பாலான திரையரங்குகளில் 9 மணிக்கு மேல் திரையிடப்பட்டு வரும் சூழலில் புறநகர் பகுதிகளான ஆவடி அம்பத்தூர், பூந்தமல்லி பகுதியில் காலை சிறப்பு காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை சம்பந்தப்பட்ட காவல் துறை மற்றும் வருவாய் துறை கண்டுகொள்ளாமல் இருப்பது அரசு அறிவித்த அரசாணையை அவமதிப்பதாகவும், கேள்விக்குறியாகவும் உள்ளது.