திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சன்னதி தெருவை சேர்ந்த ஆகாஷ் என்பவர் நேற்று இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமம் அருகே சென்றபோது எதிரே வந்தவாசி நோக்கி வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஆகாஷ், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த விஜயன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த சிவா என்பவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சிவா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வந்தவாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.