Homeசெய்திகள்இந்தியாபெண் மருத்துவர் கொலை - ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர்  உள்பட இருவர் கைது

பெண் மருத்துவர் கொலை – ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர்  உள்பட இருவர் கைது

-

கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்திப் கோஷ் உள்ளிட்ட 2 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவுப்பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடுரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து விசாரித்து வந்தனர். மேலும் மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்திப் கோஷ் மருத்துவமனை நிதி முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டார்.

doctor

இதனிடையே, பயிற்சி பெண் மருத்துவருக்கு நீதி வேண்டி பயிற்சி மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் பெண் மருத்துவர் கொலை வழக்கில் தடயங்களை அழிக்க முயன்ற முன்னாள் முதல்வர் சந்திப் கோஷ், மருத்துவமனை காவல்நிலைய அதிகாரி அபிஜித் மொண்டல் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், பெண் மருத்துவர் கொலை வழக்கில் புதிய திருப்பமாக மருத்துவமனை முன்னாள் முதல்வர் சந்திப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இதேபோல் மருத்துவமனை காவல் நிலைய அதிகாரி அபிஜித் மொண்டலும் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கொலை நடைபெற்ற ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் தடயங்களை அழிக்க முயன்ற புகாரின் அடிப்படையிலும், சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிய தாமதப்படுத்தின் அடிப்படையிலும் இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, பெண் மருத்துவர் கொலையில் கைதானவர்களின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

MUST READ