ஆங்கில மருந்துகளுக்கு முன்னதாகவே அனுபவத்தையும் அறிவியலையும் கலந்து நம் முன்னோர்கள் பல மூலிகைகளை மருந்துகளாக பட்டியலிட்டுள்ளனர். ஆங்கில மருந்துகளின் வரவிற்கு பின்னர் இத்தகைய தமிழ் மருத்துவ முறைகள் சற்று இறக்கத்தை சந்தித்தாலும் இன்றைய தலைமுறை ஆரோக்கியமான வாழ்வுக்கு பழமையான மூலிகை மருத்துவம் கை கொடுக்கும் என்பதையும் உணர்ந்துள்ளனர். அத்தகைய மூலிகைகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சங்குப் பூ. மிகச் சாதாரணமாக சாலையோரங்களிலும், தோட்டத்து வேலிகளிலும் இவை காணப்படுவதால் புறக்கணிக்கப்பட்ட மலர்களாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால் உண்மையில் இதன் மருத்துவ குணங்கள் பற்பல. பார்ப்பதற்கு சங்கு வடிவத்தில் இந்த பூக்கள் காணப்படுவதால் இதற்கு சங்குப் பூ என்று பெயர் வந்தது. கொடி வகையைச் சேர்ந்த இந்த மூலிகையில் நீல நிறம் மற்றும் வெள்ளை நிறம் ஆகிய இரண்டு வண்ணங்களில் மலர்களைக் காணலாம். பேச்சு வழக்கில் இதனை காக்கரட்டான் என்றும் கூறுவர். சிறுநீர் குழாயில் உருவாகும் கல்லடைப்பு, வயிற்றுப்போக்கு, வாந்தி, உடல் பருமன், உடலில் ஏற்படும் வீக்கங்களுக்கு மருந்தாக, சங்குப் பூவின் இலை மற்றும் வேர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பூவினை கிரின் டீ போல கொதிக்கும் வெந்நீரில் சேர்த்து டீயாக பருகினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, தொண்டை பகுதியில் ஏற்படும் தொற்றினையும் தடுக்கும். மேலும் நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களையும், மனித மூளை செயல்பாட்டுக்கு உதவும் நியூரான்களின் ஆரோக்கியத்திற்கும் இவை இன்றியமையாதது. சங்குப் பூவின் வேர்கள் பல தோல்வியாதிகளுக்கு மருந்தாகவும், செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சூடான தண்ணீரில் சேர்க்கப்படும் பொழுது சங்கு பூவின் நீல நிறமானது பிரிந்து வருவதால் உணவுப் பொருள்களுக்கு இயற்கையான முறையில் உருவாக்கப்பட்ட நிறமியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும், மூல வியாதி உள்ளவர்களுக்கும் மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வேர், இலை, பூ என ஒவ்வொரு பகுதியும் நமக்கு அருமருந்தாக பயன்படுகின்றன. இத்தகைய அருமருந்தை சாதாரணமாக கடந்து போகாமல் தேவைக்கேற்ப முறையாக பயன்படுத்தி பயன்பெறுவோமாக.