தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 23-ஆம் தேதி வாக்கில், மத்தியமேற்கு வங்ககடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.