கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2023ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலா ஆகியோருக்கு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை வரும் 30ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படுகிறது. மேலும், “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருது பெறும் இருவருக்கும் தலா 10 இலட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.