ஆலப்புழாவில் 70வது நேரு கோப்பை படகு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்போட்டியில் 19 பாம்பு படகுகள் உள்ளிட்ட 74 படகுகள் பங்கேற்றன.
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள புன்னமடா ஏரியில் ஆண்டுதோறும் நேரு கோப்பை படகு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்பது வழக்கம்.
இந்நிலையில் 70வது நேரு கோப்பை படகு போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதனையொட்டி புன்னமடா ஏரியில் நடைபெற்ற போட்டியை மாநில பாம்பு படகு சங்கத்தின் தலைவரான ஆர்.கே.குருப் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 19 பாம்பு படகுகள் உள்ளிட்ட 74 படகுகள் பங்கேற்றன. 9 பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போடடியில் நாடு முழுவதும் இருந்து ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
குறிப்பாக பிரசித்தி பெற்ற பாம்பு படகு போட்டியில் 100 பேர் கொண்ட குழுவினர் பங்கேற்று போட்டி போட்டுக்கொண்டு துடுப்பை விரைவாக அசைத்து இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றனர். இந்த படகு போட்டியை உள்ளுர் மற்றும் வெளி நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.