தமிழ்நாட்டின் துணை முதல்வராக இன்று பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார். துணை முதல்வராகும் நீங்கள் இணை முதல்வராய் வளர வாழ்த்துகிறேன் என தமது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அமைச்சரவையில் செந்தில் பாலாஜி, ஆவடி நாசர், கோவி செழியன், பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோரின் துறைகளும் மாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு புதிய அமைச்சர்கள் இன்று மாலை 3.30 மணிக்கு பொறுப்பேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டின் 3-வது துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலினுக்கு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்கின்றனர்.
கவிப்பேரரசு வைரமுத்து தமது எக்ஸ் பக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
துணை முதல்வராகும்
உதயநிதி ஸ்டாலின் அவர்களே
உங்களை வாழ்த்துகிறேன்.
உங்கள்
அன்னையைப் போலவே
நானும் மகிழ்கிறேன்.
இந்த உயர்வு
பிறப்பால் வந்தது என்பதில்
கொஞ்சம் உண்மையும்
உங்கள் உழைப்பால்
வந்தது என்பதில்
நிறைய உண்மையும் இருக்கிறது.
பதவி உறுதிமொழி ஏற்கும்
இந்தப் பொன்வேளையில்
காலம் உங்களுக்கு
மூன்று பெரும் பேறுகளை
வழங்கியிருக்கிறது.
முதலாவது
உங்கள் இளமை
இரண்டாவது
உங்கள் ஒவ்வோர் அசைவையும்
நெறிப்படுத்தும் தலைமை
மூன்றாவது
உச்சத்தில் இருக்கும்
உங்கள் ஆட்சியின் பெருமை
இந்த மூன்று நேர்மறைகளும்
எதிர்மறை ஆகிவிடாமல்
காத்துக்கொள்ளும் வல்லமை
உங்களுக்கு வாய்த்திருக்கிறது
உங்கள் ஒவ்வோர் நகர்வும்
மக்களை முன்னிறுத்தியே
என்பதை
மக்கள் உணரச் செய்வதே
உங்கள் எதிர்காலம்
என் பாடலைப் பாடிய
ஒரு கலைஞன்
துணை முதல்வராவதை எண்ணி
என் தமிழ் காரணத்தோடு
கர்வம் கொள்கிறது
கலைஞர் வழிகாட்டுவார்
துணை முதல்வராகும் நீங்கள்
இணை முதல்வராய்
வளர வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.