ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் படம் குறித்த சில தகவல்களை இயக்குனர் எம்.ராஜேஷ் பகிர்ந்துள்ளார்.
சிவா மனசுல சக்தி, ஒரு கல் ஒரு கண்ணாடி, பாஸ் என்கிற பாஸ்கரன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் எம். ராஜேஷ். அடுத்ததாக இவர் ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியங்கா மோகன், பூமிகா சாவ்லா, சரண்யா பொன்வண்ணன், சீதா, நட்டி நட்ராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். ஸ்கிரீன் சீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வருகின்ற தீபாவளி தினத்தன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இயக்குனர் எம்.ராஜேஷ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிரதர் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழ் சினிமாவில் அக்கா – தம்பி இருவருக்கும் இடையிலான உறவை பேசும் படங்கள் அதிகம் வந்திருக்கலாம். ஆனால் நான் இயக்கி இருக்கும் பிரதர் திரைப்படம் இன்றைய தலைமுறையினருக்கான அக்கா – தம்பி படமாக இருக்கும். அவர்கள் இந்த தலைமுறையில் எப்படி வாழ்கிறார்கள். பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள் என்பதை உங்களுக்கு கதையாக தந்துள்ளேன். அக்கா – தம்பிக்கு இடையில் உள்ள பந்தத்தை ஒரு கூட்டுக் குடும்ப பின்னணியில் கூறி இருக்கிறேன். அதேசமயம் 100% இந்த படம் அக்கா- தம்பிக்கான படமாக இருக்கும் என்று சொல்ல மாட்டேன். அதாவது என்னுடைய ஸ்டைலில் இந்த படம் இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.