ஆவடி: கோவை, விளாங்குறிச்சியை அடுத்த சேரன்மா நகரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் , சென்னை ஆவடியை அடுத்த காவல்சேரி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றை ஆரம்பித்துள்ளார். அதனை தனது நண்பரிடம் பார்த்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது நண்பனும் அவரது மனைவியும் இணைந்து போலி ஆவணம் தயாரித்து அந்த நிறுவனத்தை அபகரித்துள்ளார். இந்த புகாரில் தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாநகரம் விளாங்குறிச்சியை அடுத்த சேரன்மா நகரில் வசித்து வருபவர் தனிஷ் சேவியர் ஆனந்தன். இவருக்கு 54 வயதாகிறது. ஆனந்தனுக்கு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த காவல்சேரி பகுதியில் அட்டை கம்பெனி ஒன்றை ஆரம்பிக்க விரும்பினார். அவர் கோவையில் வசிக்கும் நிலையில், தனது நண்பரான சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்த முத்துராஜ் என்பவரிடம் தனது பெயரில் கம்பெனியை ஆரம்பித்து பார்த்துக் கொள்ளுமாறுக்கூறி கடந்த 2021-ம் ஆண்டு ஒப்பந்தம் ஏதுமின்றி ஒப்படைத்திருக்கிறார்.
இந்நிலையில் முத்துராஜ் தனது மனைவி முத்துலட்சுமி பெயரில் அந்த கம்பெனியை மாற்றியிருக்கிறார். பின்னர் அவரது நண்பர் கார்த்திக் என்பவருடன் சேர்ந்து கொண்டு போலி ஆவணங்களை உருவாக்கி கோயம்பேடு வங்கி கிளையில் கடனும், திருவள்ளூரில் அரசு மானியமும் பெற்றுள்ளனர்.
இதையடுத்து முத்துராஜ் அவரது மனைவி மற்றும் கார்த்திக் ஆகிய மூவரும் சேர்ந்து தனது கம்பெனியை அவர்களுக்கு எழுதி கொடுத்தது போல் போலியான ஆவணம் தயாரித்து வங்கியில் கடன் பெற்று ரூ.4 கோடி மோசடியில் ஈடுபட்டது தனிஷ் சேவியர் ஆனந்தனுக்கு விசாரித்த போது தெரியவந்தது.
தன்னை ஏமாற்றிய நண்பன் மற்றும் மனைவி மற்றும் அவருக்கு உதவியவர் உள்பட 3 பேர் மீதும் ஆனந்தன், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, இன்ஸ்பெக்டர் ஆல்பின் பிரிஜிட் மேரி தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து சென்னை கீழ்ப்பாக்கம் பேங்க் தெருவை சேர்ந்த முத்துராஜ் (46), அவரது மனைவி முத்துலட்சுமி (40) மற்றும் கார்த்திக் (39) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.