இலவச பேருந்து- மகளிருக்கான சலுகை அல்ல; உரிமை: மு.க.ஸ்டாலின்
மகளிருக்கு நகர பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பது சலுகை அல்ல, மகளிரின் உரிமை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது “எனது பேரன்பிற்குரிய சிங்கப் பெண்களே” எனக் கூறி உரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின், “மகளிருக்கு நகர பேருந்துகளில் கட்டணம் இல்லை என்பதை சலுகையாக நான் பார்க்கவில்லை. மகளிரின் உரிமை என்றுதான் சொல்லுவேன். இது பெண்களுக்கு சமூக, பொருளாதார விடுதலையை வழங்கியுள்ளது. இத்திட்டத்தால் மாதந்தோறும் ரூ.600 முதல் ரூ.1,200 வரை செலவு மிச்சமாகிறது என பெண்களே கூறுகின்றனர். இதனால் அரசுக்கு எத்தனை கோடி இழப்பு என்பதைவிட எத்தனை லட்சம் பெண்கள் பயனடைகிறார்கள் என்பதுதான் எனது லட்சியம். பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை.
நாட்டின் வளர்ச்சி மகளிர் கையில்தான் உள்ளது. மகளிரை வாழ்த்துவதன் மூலம் இந்த நாட்டை நாம் வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். பெண்களை தன்னம்பிக்கை மிக்கவர்கள், துணிச்சல்மிக்கவர்களாக மாற்றியது திராவிட இயக்கம். தந்தை பெரியாருக்கு பெண்கள்தான் பெரியார் என்ற பட்டத்தையே தந்தனர். பெண்களை அனைத்து முறையிலும் முன்னேற்றிவருகிறது திராவிட மாடல் அரசு. பெண்கள் என்றால் ஆணுக்கு அடிமைத்தனம் என்பது ஆண்கள் மனதில் இன்றும் உள்ளது. இதை நாம் எப்படியாவது மாற்றியாக வேண்டும். பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது” என்றார்.
முன்னதாக சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை மகளிர் காவல் நிலையம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண் காவலர்களுக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.