தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை, உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் குறித்து,சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், ஆம் ஆத்மி கட்சி மாநிலத் தலைவர் வசீகரன் என
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் சார்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அந்தந்த சமூகத்திற்கான கல்வி, வேலை வாய்ப்பு, கல்வி உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். இன்று தமிழகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசியல் அமைப்புகள் கலந்து கொண்டு பல விஷயங்கள் குறித்து விவாதித்தோம். தமிழ்நாட்டில் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் போது மொழிவாரியாக மக்களின் கல்வி பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து உரிய விரிவான கணக்கெடுப்பை நடத்த வேண்டும்.
ஐந்து சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வந்த போது புள்ளி விவரங்கள் அடிப்படையில் விவரங்களை கேட்கின்றனர். ஆகவே அந்த தரவுகள் நம் கையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் 69% இட ஒதுக்கீடுக்கான புள்ளி விவரங்கள் நம் கையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் உச்ச நீதிமன்றம் கேட்கும் போது நாம் கொடுத்தால் இட ஒதுக்கீட்டுகளை நீட்டிக்க வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
ஒரு வகுப்பினருக்கு அதிகமாக கொடுத்து விட்டனர் என்றும் இன்னொரு வகுப்பினருக்கு குறைவாக கொடுத்து விட்டனர் என்ற சண்டை சச்சரவு இல்லாமல் இருப்பதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். மொழி கல்வி உள்ளிட்ட அனைத்து தரவுகளையும் சேர்ப்பதற்கான ஒரு கணக்கெடுப்பை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும்.
சட்டநாதன் காலத்தில் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை வைத்துக் கொண்டுதான் பல்வேறு வகுப்பினருக்கும் இட ஒதுக்கீட்டை நாம் அளித்து வருகின்றோம். தற்போது எந்தெந்த சமூகம் எந்தெந்த எண்ணிக்கையில் இருக்கின்றார்களோ அதற்கு ஏற்றவாறு இட ஒதுக்கீடுகளை வழங்க வேண்டும். குறைவான இருக்கின்ற சமூகங்கள் அதிக அளவில் இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளக் கூடாது. இதுதான் சமூக நீதி. தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் இதில் எந்த தடையும் இல்லை என உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இங்கே நாங்கள் ஆலோசனை நடத்தி உள்ளோம்.
இங்கே கூடியுள்ள இயக்கங்கள் ஒன்று சேர்ந்து முதலமைச்சரை நேரடியாக சந்தித்து சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நம் கோரிக்கை வைக்க இருக்கின்றோம். முதலமைச்சர் எங்களுக்கான நேரம் ஒதுக்கி எங்களை அழைத்துப் பேசி சமூகநீதி குறித்தான அனைத்து கட்சி கூட்டத்தையும் உடனடியாக நடத்த வேண்டும்.
எங்களது நியாயமான சமூக நீதிக்கான உரிமைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். பீகார், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் எடுக்கப்பட்டது போல சாதிவாரி கணக்கெடுப்புக்கான முன்னெடுப்பை நீங்கள் எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்த இருக்கின்றோம். முதலமைச்சர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு நாங்கள் பக்கபலமாக இருக்கின்றோம் என்பதையும் முதலமைச்சரிடம் தெரிவிக்க இருக்கின்றோம்.
மாநில அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, புள்ளி விவரங்களை சேகரிப்பதற்கு மாநில அரசுக்கு எந்த தடையும் இல்லை. மாநில அரசுக்கு முழு உரிமை இருக்கின்றது என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆகையால் தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்து அனைத்து சமூகத்திற்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கான கூட்டம் தான் இது என்றார்.
ஒன்றிய அரசு என்பது சனாதான அரசு.வர்ணாசிரம கோட்பாடுகளை ஏற்றுக்கொண்ட அரசு. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு 2011ல் அறிக்கை அளிக்கப்பட்டு தற்போது அது பிரதமர் நரேந்திர மோடி கையில் இருக்கின்றது. அதை ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி வெளியிடுவதற்கு கூட மனமில்லாத சமநீதி கோட்பாடுகளுக்கு எதிரான அரசிடமிருந்து நாம் எதிர்பார்க்க முடியாது. அதனால் தான் சமூக நீதி அரசான திராவிட முன்னேற்றக் கழக அரசிடம் எங்கள் கோரிக்கையை வைக்கின்றோம். நீங்கள் இதற்கான முன்னேற்பாடுகளை எடுங்கள் இதில் என்ன இடர்பாடுகள் வந்தாலும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் நாங்கள் உங்கள் பக்கம் நின்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு உங்களுக்கு உறுதியாக இருப்போம் என்று மேலும் கூறினார்.
வடமாநிலங்களிலிருந்து வரக்கூடியவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அவர்களின் ஆதிக்கம் இங்கு அதிகரித்து விட்டது. ஆகையால் இந்த சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தினால் தமிழக மக்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படும் என்று வேல்முருகன் தெரிவித்தார்.