மேகாலயா மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக காரோ மலைப்பகுதியில் அமைந்துள்ள 5 மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
மேற்கு காரோ மலைப்பகுதியில் உள்ள டாலு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். மேலும் டாலு முதல் பாக்மாரா இடையே நிலச்சரிவுகள் காரணமாக போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.
இதேபோல், தெற்கு கரோ மலைப்பகுதியில் உள்ள கசுவாபரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஹதியாசியா சாங்மாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்தனர். அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே நிலச்சரிவில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.