ஆவடி அருகே சாலையோர வேப்பமரத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.
சென்னை ஆவடி அருகே பிரதான சாலையில் இரும்பு பைப் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தின் சுற்றுச்சுவர் அருகே அமைந்துள்ள வேப்பமரத்தில் 60 வயதுடைய ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து ஆவடி காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், தற்கொலை செய்துகொண்ட முதியவரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார் என்பது குறித்தும், அவர் எந்த ஊரை சேர்ந்தவர், எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்றும் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக அவர் பணிக்கு சென்று வீடு திரும்புபவரை போல் பேக் மாட்டிக்கொண்டு இறந்த நிலையில், ஒரு செட் துணி மட்டுமே அவர் பையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் போக்குவரத்து நிறைந்த பிரதான சாலையின் ஓரமாக அமைந்துள்ள மரத்தில் 60 வயது மதிப்புடைய முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.