ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அதிமுக சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரிடம் ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் சகோதரரும், முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளருமான விஜய நல்லதம்பி மீது கடந்த 2021ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 2022ஆம் ஆண்டு விஜய நல்லதம்பி விருதுநகர் மாவட்ட குற்றபிரிவு போலீசாரால் கைது செய்யபட்டு பின்னர் ஜாமீனில் வெளி வந்தார்.
இந்த நிலையில், பண மோசடி வழக்கு ஜாமினில் விதிக்கப்பட்ட நிபந்தனையை மீறியதால் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 19ம் தேதி விஜய நல்லதம்பியின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் போலிசாரால் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில், அவர் தலைமறைவாகினார்.
இந்நிலையில், சிவகாசி அருகேயுள்ள மாரநேரி பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த விஜய நல்லதம்பியை இன்று மீண்டும் 2வது முறையாக விருதுநகர் மாவட்ட குற்றபிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.