சென்னை கதீட்ரல் சாலையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
சென்னை கதீட்ரல் சாலையில் 6.09 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 45 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவிற்கு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இங்கு தேனீ வளர்ப்பு, பட்டு வளர்ப்பு முறை, பாரம்பரிய தோட்டக்கலைத்துறை சார்ந்த பொருட்கள் அடங்கிய உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 500 மீட்டர் நீளம் உடைய ‘ஜிப்லைன்’ அமைக்கப்பட்டுள்ளது. ஜிப்லைன் சாகச பயணம் செல்ல பெரியவர்களுக்கு ரூ.250, சிறியவர்களுக்கு ரூ.200, குழந்தைகள் மடியில் அமர்ந்து செல்ல ரூ.150 கட்டணம் நிர்ணயிக்கபட்டுள்ளது. இதேபோல், 10,000 சதுரஅடி பரப்பில் அரிய வகை பூச்செடிகளால் அமைக்கப்பட்டுள்ள 16 மீட்டர் உயர கண்ணாடி மாளிகை, நீராவி நடைபாதை உள்ளிட்ட பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.
இதேபோல், பார்வையாளர்களை படம்பிடிக்கும் கலைஞர்களின் கலைக்கூடம்,
தொடர் கொடி வளைவு பாதை, 120 அடி நீளம் உடைய பனிமூட்ட பாதை. 2,600 சதுரஅடி பரப்பிலான ஆர்க்கிட் குடில், வெளிநாட்டு பறவையகம், 23 அலங்கார வளைவு பசுமை குகை, சூரியகாந்தி கூழாங்கல் பாதை, மர வீடு, அருவி,
இசை நீரூற்று, குழந்தைகள் விளையாடும் இடம், பசுமை நிழற்கூடாரம், பாரம்பரிய காய்கறி தோட்டம், சிற்றுண்டியகம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கலைஞர் நூற்றாண்டு பூங்காவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து, பூங்கா நாளை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பூங்கா செயல்படும். நுழைவு கட்டணம் தவிர்த்து ஒவ்வொரு பிரிவினையும் காண தனிக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளம் மூலம் நுழைவு கட்டண விவரங்கள் மற்றும் நுழைவு சீட்டை பெற்றுக் கொள்ளலாம். மேலும் பூங்காவில் நேரடியாகவும் டிக்கெட் வாங்கிக் கொள்ளலாம்.
கலைஞர் நூற்றாண்டு பூங்கா தொடக்க விழாவில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ,வேலு, வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.