தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து, திமுக தலைமை கழகம் உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனையொட்டி தேர்தல் தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் அடங்கிய ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டு, அவ்வப்போது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பார்வையாளர்களை நியமித்து, திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டு உள்ள தொகுதி பார்வையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவார்கள் என திமுக தலைமை தெரிவித்துள்ளது. இதன் மூலம் திமுக 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் கட்சியாக தொடங்கியுள்ளது.