சென்னை தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியில் 5க்கும் மேற்பட்ட வீரர்கள் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவையொட்டி சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முப்படைகளின தலைமை தளபதி அனில் சவுகான், இந்திய விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் மற்றும் விமானப்படையின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் பங்கேற்று மிடுக்கான நடைபோட்டு அணிவகுத்து சென்றனர். அப்போது, வெயிலின் தாக்கத்தின் காரணமாக 5க்கும் மேற்பட்ட விமானப்படை வீரர்கள் மயக்கமடைந்தனர். இதனை அடுத்து, மயக்கம் அடைந்த வீரர்களை உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர். விமானப்படை வீரர்களின் அணி வகுப்பின்போது வீரர்கள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.