கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ். இவர் பெரிய ரவுடி கும்பல் தலைவர் என அறியப்படுகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என கூறப்படுகிறது.
கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவரை போலீஸார் நேற்று முன் தினம் கைது செய்த போது அவருடைய கூட்டாளி சிஹாஸும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்வர்களிடம் இருந்து கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. போலீஸாரின் விசாரணையில், ஓம்பிரகாஷை சந்திப்பதற்காக திரையுலகத்தினர் உட்பட 20 பேர் ஓட்டலுக்குள் சென்று சந்தித்தது தெரிய வந்துள்ளது. போலீஸார் அங்கு செல்வதற்கு முன், போதைப் பொருள் பார்ட்டி நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் போலீஸாரின் அறிக்கையில், நடிகர் ஸ்ரீநாத் பாஸி, நடிகை பிரயாகா மார்ட்டின் ஆகியோர் அங்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும் கைப்பற்றப்பட்ட செல்போன்கள் அடிப்படையில் விசாரித்து வருவதாக கொச்சி நகர காவல்துறை துணை ஆணையர் கே.எஸ். சுதர்சன் தெரிவித்துள்ளார்.