முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.38,600 கோடி மதிப்பீட்டிலான முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய முதலீடுகள் மூலம் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் ஆமைச்சர்கள் தங்கம் தென்னரசு, டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் செய்தியாளர்கள் சந்தித்து பேசினர். அப்போது, ரூ.38,689 கோடி முதலீட்டிற்கான 14 முதலீடுகளுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிய முதலீடுகள் மூலம் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
இந்த முதலீடுகள் மின்னணு, பாதுகாப்பு, செல்போன் உபகரணங்கள் தயாரிப்பு, பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, ஊசி மருந்துகள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணி உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் அமோனியா உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் புதிதாக 14 முதலீடுகள் வந்துள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி முதலீட்டில் டாடா நிறுவனத்தின் தொழிற்சாலை அமைய உள்ளதாகவும், ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான யுசான் டெக்னாலஜி, காஞ்சிபுரத்தில் ரூ.13,180 கோடி முதலீட்டில் ஆலை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர். விருதுநகர்,நெல்லை, துத்துக்குடி, ராமநாதபுரம் மற்றுமு திருவண்ணாமலை மாவட்டங்களில் பிஎஸ்ஜி நிறுவனத்தின் துணை நிறுவனமான கிரின் எனர்ஜி சார்பில் ரூ.10,375 கோடி முதலீட்டில் ஆலை அமைக்க உள்ளதாகவும், அரியலூர் மாவட்டத்தில் ப்ரி டிரெண்டிங் நிறுவனம் ஆலை அமைக்க உள்ளதாகவும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். மேலும, சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.