வங்கதேசத்தில் உள்ள காளி கோவிலுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடத்தினை மர்மநபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்தின் சத்கிரா சியாம்நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற ஜெசோரேஷ்வரி காளி கோவில் அமைந்துள்ளது. இந்து மத புராணங்களின்படி, இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் இருக்கும் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக இந்த ஜெசோரேஷ்வரி கோவில் விளங்குகிறது. கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி அரசு முறை பயணமாக வங்கதேசம் சென்றிருந்த பிரதமர் மோடி, ஜெசோரேஷ்வரி கோவிலில் உள்ள காளி சிலைக்கு, தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி கிரீடம் ஒன்றை அணிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி பரிசாக வழங்கிய கிரீடத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிற்பகல் 2 மணி அளவில் கோவில் பூசாரி நடையை சாத்திவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது, அங்கு அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சுவாமி சிலையில் இருந்த கிரீடத்தினை திருடிச் சென்றுள்ளனர். பின்னர் கோவில் பணியாளர்கள் நடை திறந்து கிடப்பதை சென்று பார்த்தபோது காளியின் கிரீடம் திருட்டு போனது தெரியவந்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வங்கதேசத்திற்கான இந்திய தூதரகம் இந்த விவகாரத்தில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.