மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி ஆஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கேப்டன் ஹர்மன்பிரித் கவுர் அரை சதம் அடித்து அசத்தினார். எனினும் இந்திய அணியால் 20 ஒவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 9 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. மேலும் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது.
இதனிடையே, நாளை நடைபெறும் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவை பொறுத்தே இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு தெரியவரும். இதனால் நியூசிலாந்து -பாகிஸ்தான் மோதும் நாளைய போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.