கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகள் நியமித்து, மின்சாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகள் நியமித்து, மின்சாரத்துறை உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கு, 15 செயற்பொறியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வார்கள் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் மழை வெள்ள மீட்பு பணிகளை மேற்கொள்ள அனைத்து குழுக்களும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள மின்சாரத்துறை, பொதுமக்கள் மின்னகம் மூலமாக புகார் அளிக்கலாம் என்றும், சமூக வலைத்தளம் மூலம் புகார் அளிப்பவர்கள் மின்இணைப்பு எண்ணுடன் புகாரை பதிவிட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மழையின்போது தண்ணீரில் முழ்கிய 4,800 பில்லர் பாக்ஸ்கள், 1 மீட்டர் அளவுக்கு உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளதாகவும், 31 துணை மின்நிலையங்களில் தண்ணீர் புகாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மின்சாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.